தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வார்கள்.. ஆனால் காவல்துறைக்கே நண்பன்- அதாவது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்றால் யார்? அவர்களின் பணி என்ன என்பது குறித்து விவரிக்கின்றது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் Friends of Police அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாக பெருத்த சர்ச்சை எழுந்தது. ஆனால், இந்த விமர்சனங்களில் உண்மையில்லை என்பது பின்னர் உறுதிசெய்யப்பட்டது.. இந்த தொடர் சர்ச்சைகள் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் Friends of Police அமைப்பை காவல்நிலைய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என தடை விதித்து மாவட்ட காவல்உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த Friends of Police யார்?, Friends of Police அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பாகும்… இந்த அமைப்பின் நோக்கமே போலீசாரின் அதிகாரங்களை மக்களுக்கும் பங்கிட்டு கொடுப்பது தான்.. 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர், 1994ல் தமிழகம் முழுவதும் விரிவடைந்தது..
மாவட்டம் தோறும் உள்ள இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற இந்த அமைப்பு வாய்ப்பளித்ததால் போலீசாகும் கனவோடு இருக்கும் பல இளைஞர்களையும் ஈர்த்தது. குறிப்பாக மணல் கடத்தல், அரிசி கடத்தல் என தங்கள் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை இந்த அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் காவல்துறையினரின் பார்வைக்கு கொண்டு சென்றனர். இது குற்றவாளிகளை எளிதில் நெருங்க போலீசாருக்கு உதவியாய் இருந்தது..
இது தவிர, காவல்துறையினரின் வேலைப்பளுவை குறைக்க காவல்நிலையங்களில் சின்ன சின்ன வேலைகள் செய்வது, போக்குவரத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்களுக்கு உதவுவது மற்றும் கிராமங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் போலீசாருக்கு இந்த அமைப்பைச்சேர்ந்த இளைஞர்கள் உதவுவார்கள்…
அதேநேரம், Friends of Police அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்சிசார்ந்த செயல்களிலோ, சண்டை, சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது.. காவல்துறையினரை தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்க கூடாது.. நன்கொடை வசூலிப்பது, நிதி திரட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் இந்த , இந்த அமைப்பினருக்கு உண்டு…
காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது…
Discussion about this post