இளைஞர்களை வைத்து வேலைவாங்கும் எல்லா தலைமைகளுக்கும் நேசமணிதான் குலதெய்வம்.
நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், பிரண்டு படுக்க இடமில்லாமல், பேச்சு துணைக்கு ஆளில்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல், தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் , தானே குடிக்க நினைத்தாலும் ஒரு சொம்பு கூட இல்லாமல் வயிற்றில் அரும்பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.
தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. நாய் சேகர் என்ற பெயரில் டாப் ரவுடியாக இருந்த போதும் காதலுக்காக எல்லா வற்றையும் விட்டுவிட்டு ஒரு சோடா கம்பெனியில் சிறுசுகளிடம் அடிவாங்கினார். அந்த காதல் கைகூடாதபோதும் கூட ‘நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்’ என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி.
அப்போதும் கூட தனக்கு எண்டே கிடையாது என்றுசொல்லி தன்னம்பிக்கையின் அடையாளமாகவே திகழ்ந்தார்..
எங்கிருந்தும் பீனிக்ஸ் பறவை போல் முளைத்து வரும் நேசமணி இந்த முறை தான் வாழ்வை பிச்சையெடுப்பதில் தொடங்கினார்.. பின் மக்கள் ஆதரவுடன் அன்னபோஸ்ட ஏரியா கவுன்சிலராக மாறினார். அண்ணல் அம்பேத்காரின் வழியொற்றி சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை.
மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் ச்சாம்ப் வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிய மனிதர்களின் வாழ்க்கையை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது நாய் சேகராக இருந்தபோது ரவுடிகளின் உறுப்பெடுக்கப்போன இந்த கருப்பு பருப்பின் பழைய வழக்கை , ஆட்சி மாற்றத்தின் காரணமாக தூசுதட்டி தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது.
அவனிடம் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து வெறும் அண்டர்வேரோடு ஹெல்மெட் மட்டும் மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் தப்பிச்சென்றுகொண்டிருந்த போது மீண்டும் காவல்துறை மடக்க, “அவரையெல்லாம் நீங்க பிடிக்க முடியாது சார்..அவர் ஒரு டேஞ்சரஸ் புளோ” என்று மீண்டும் நிரூபித்து விட்டு காவலர்களிடமிருந்து கம்பிநீட்டினார்..
தப்பி வந்து பின் திருந்தி மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் சூழ்ச்சியால் அவரை வைத்தே அழித்த கதை மிகவும் கவலைக்குரியது.
எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.
யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.
வேலை நேரத்தில் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு சொல்லிப் புரியவைக்க முடியாததால் தன் அண்ணன் மகனை வைத்தே இதை செய்ய வைத்து தன்னை தானே காயப்படுத்திக்கொண்ட அந்த நல்ல உள்ளத்தை என்ன சொல்லி பாராட்டுவது…??
சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு?.. என்ற வாழ்வியல் இலக்கணம்,
பேச்சு பேச்சாதான் இருக்கணும் என்ற தீர்மான வரைவு,
மனுஷன் இன்னைக்கு இருப்பான் நாளைக்கு போவான் என்கிற நிலையாமை தத்துவம்,என தன் வாழ்க்கை முழுக்க பெரும் தத்துவங்களை அசால்ட்டாக வெளிப்படுத்திய அந்த மனிதன் இவ்வளவும் செய்தது நமக்காகத்தான் என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுவோமாக..
Discussion about this post