நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்த எல். முருகன் 1977ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். படித்துவிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல். பயின்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் எல். முருகன், உயர்நீதிமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்த எல்.முருகன் மாணவர் அணியில் சிறப்பாக பணியாற்றினார். கடந்த 20 வருடங்களாக பாஜகவில் உள்ள எல். முருகன், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரத்தில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் பிறகு தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். அவருக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலம் உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், தமிழக பாஜகவிற்கு இரண்டாவது முறையாக தலித் ஒருவர் தலைவராகியுள்ளார்.
Discussion about this post