ஹிண்டன்பர்க் ஒரு அமெரிக்க தடயவியல் மற்றும் நிதிநிலை அறிக்கை நிறுவனம் ஆகும். இதனைத் தொடங்கியவர் நாதன் ஆண்டர்சன். இவர் இந்த நிறுவனத்தை எதற்காகத் தொடங்கினார் என்றால் பங்கு சந்தையில் மனிதனால் உண்டாகும் அழிவினை [Man Made Disaster] ஆராய்ந்தும் கண்காணிக்கவும் ஹிண்டன்பர்க்கினைத் தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் 2017ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஹிண்டன்பர்க் என்று இதற்கு பெயர் வைப்பதற்கு காரணம் என்ன என்று விசாரித்தால் 1937ஆம் ஆண்டின் காலகட்டத்திற்கு நாம் செல்லவேண்டியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் ஏர்ஷிப் என்பது மிகவும் பிரபலமான ஒரு ராட்சத பலூன். இதனை இராணுவப் பொருட்கள் சுமந்து செல்வதற்கும், குறைந்தபட்ச நபர்கள் பயணிக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த இராட்சத பலூனில் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயு அதிகம் நிரப்பப்பட்டு இருக்கும். இந்த விஷயம் அதில் பயணம் செய்யும் மனிதர்களுக்கும் தெரியும். ஆபத்து தெரிந்தும் பயணம் செய்யும் அவர்களுக்கு 1937ஆம் ஆண்டு நிஜத்திலுமே ஒரு ஆபத்து நிகழ்ந்தது. ஹிண்டன்பர்க் எனும் பெயரினைக் கொண்ட ஜெர்மனியைச் சேர்ந்த ராட்சத பலூன் அமெரிக்காவில் தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில் 30க்கும் அதிகமான அதில் பயணித்தவர்கள் இறந்தனர். இது மனிதனால் உண்டாக்கப்பட்ட விபத்தாகவே அனைவரும் கருதினர். ஆகவே இதுபோன்று பங்கு சந்தைகளிலும் மனிதனால் உண்டாக்கும் விபத்து நிகழ்கிறது. எனவே அதனை ஆராய ஒரு நிறுவனத்தை அமைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். மேலும் வெடித்து சிதறிய ராட்சத பலூனின் பெயரான ஹிண்டன்பர்க் எனும் பெயரை தனது நிறுவனத்திற்கு சூட்டினார்.
இந்த நிறுவனம் 2017ல் உண்டாக்கப்பட்டு பல நிறுவனங்களின் பங்கு சந்தை விவரங்களை வெளிக்கொண்டு வந்து இருக்கின்றன. இந்நிறுவனம் பெரிதாக வெளியே தெரிந்ததற்கு காரணமான ஒரு சம்பவம் 2020ல் நடந்தது. அது நிகோலா எலெக்ட்ரிக் ட்ரக் நிறுவனம் பற்றின ஆய்வறிக்கைதான். இந்த ஆய்வறிக்கையின் மூலம் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. தற்போது ஹிண்டன்பர்க் கைவைத்திருப்பது அதானி குழுமத்தின் மீது. ஆகவே இது இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பேசுபொருளாக எழுந்துள்ளது.
Discussion about this post