மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை மற்றும் பண்ணைத் தொழில்களுக்கு அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் என்னென்ன பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேளாண் தொடர்பான அனைத்து பணிகளையும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஆலைகள் 50% தொழிலாளர்களுடன் செயல்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறு-குறு தொழில்களில் ஈடுபடுவோர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து, ஏற்றுமதிக்கு தடையில்லை என்றும், மாநில அரசு அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி வர்த்தகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post