கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனாவைத் தொடர்ந்து இத்தாலியும் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனாலும் உலகின் வேறு சில நாடுகளில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகின்றது. கொரோனா பட்டியலில் இத்தாலி, சீனாவை முந்திவிட வாய்ப்புள்ள நாடுகள் எவை?
உலகெங்கும் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறப்பைச் சந்தித்து உள்ளனர். கடந்த மாதம் வரையில் சீனாவின் வுகான் நகரமே கொரோனா பரவலின் மையப் புள்ளியாக இருந்த நிலையில், இந்த மாதம் இத்தாலி கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது. அப்போது இத்தாலியின் லம்பார்டி நகரம் கொரோனா பரவலின் முக்கிய மையமாக இருந்தது. கொரோனா விவகாரத்தில் மிகத் தாமதமாகவே விழித்துக் கொண்ட இத்தாலி, சமீப நாட்களில் தனது தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் இத்தாலியில் கொரோனா பரவும் வேகம் 8%ஆகக் குறைந்து உள்ளது. எனவே சீனாவைப் போல இத்தாலியிலும் விரைவில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், சீனா மற்றும் இத்தாலி நாடுகளிடமிருந்து உரிய பாடத்தை இன்னும் கூட பல நாடுகள் கற்றுக் கொள்ளாத காரணத்தால் ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் விரைவில் சீனாவையும் இத்தாலியையும் கொரோனா தொற்றில் முந்த வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தாலியின் லம்பார்டி நகரம் கொரோனா பரவலின் மையமானதைப் போலவே, பிரிட்டனின் லண்டன் நகரமும், ஸ்பெயினின் மாட்ரிட் நகரமும், அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் புதிய கொரோனா மையங்களாகி வருகின்றன. லண்டன் மற்றும் மாட்ரிக் நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 50%
அதிகரித்து வருகின்றது.
பிரிட்டனில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஸ்பெயினிலும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து உள்ளது. ஸ்பெயின் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களில் 3ல் ஒருவர் மாட்ரிட் நகரில்தான் உள்ளனர். இன்னொருபக்கம் அமெரிக்கா கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து சீனாவை முந்தி வருகின்றது. அமெரிக்காவின் நியூயார்க்கில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு பட்டியலில் ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் விரைவில் இத்தாலியையும், சீனாவையும் பின்னுக்குத் தள்ள வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர். இது கட்டாயம் உலகிற்கு நல்ல செய்தி அல்ல.
Discussion about this post