பாலகிருஷ்ண ரெட்டியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலின்?

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சமீபத்தில், ‘விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அ.தி.மு.க. அரசுக்கு பெரும் தலை குனிவு’ என்று கூறியது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேல்முறையீட்டிற்கு வழக்கு செல்லும் நிலையில் இப்போதே இந்த வழக்கு பற்றி கருத்து தெரிவிப்பது முதிர்ச்சியற்றது என்பது ஒரு பக்கம் இருக்க, பாலகிருஷ்ணா ரெட்டி குறித்து விமர்சிக்க ஸ்டாலினுக்கு என்னத் தார்மீக தகுதி உள்ளது? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எந்த வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதை முதலில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் பார்க்க வேண்டும். 1998 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அருகில் உள்ள பாகனூரில் நடந்த கள்ளச்சாராய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்காகப் போராடியதனால், இப்போது தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறார் பாலகிருஷ்ணா ரெட்டி.

மக்களுக்காக போராடி, அதனால் சிறை பெற்று, தனது அமைச்சர் பதவியையும் அதற்காக ராஜினாமா செய்துள்ள பாலகிருஷ்ணா ரெட்டி குறித்துப் பேச, ஸ்டாலினுக்கு என்னத் தகுதி இருக்கின்றது என்று பார்க்கப்போனால், தி.மு.க.வின் மறுபக்கம் மக்கள் கண்களுக்குத் தெரிகின்றது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளார் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார். இது குறித்து வாயே திறக்காமல் இருப்பதுதான் ஸ்டாலினின் பிரதான தகுதியாக உள்ளது. தனது சொந்தக் கட்சிக்காரரின் சமூகவிரோதச் செயல்பாடுகளைக் கண்டிக்காமல் அமைதியாக இருக்கும் ஸ்டாலினின் செயல், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட தி.மு.க. கொடுக்கும் ஊக்கமாகவே பார்க்கப்படுகிறது.

தி.மு.க.வினர் ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் தொடர்ந்து சிறை சென்று கொண்டிருக்கும் போதெல்லாம் மவுன சாமியாராகிவிடுகிறார் ஸ்டாலின். தி.மு.க.வினர் பிரியாணிக்கடை, பஜ்ஜிக்கடை, டீக்கடை என்று சண்டைபோடாத கடைகளே இல்லை. ஆனால் அவர்களை எல்லாம் தட்டிக்கேட்க ஸ்டாலினுக்குத் துணிவு இருப்பதே இல்லை. இன்னொரு பக்கம் ஸ்டாலின் தான் முதலில் பொது இடங்களில் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்பதை அவரது சொந்தக் கட்சிகாரர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘தப்பு செய்தவர்கள் தி.மு.க.வில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்’ என்று மட்டும் ஸ்டாலின் அறிவித்தால், தி.மு.க.வில் இருந்து முக்கால்வாசிப்பேர் தாங்களாகவே வெளியேறிவிடுவார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் அது ஸ்டாலினுக்கும் தெரியும். சொந்தக் கட்சிக்காரர்களைத் தட்டிக்கேட்க முடியாத அல்லது முயலாத ஒருவர், பிற கட்சியினரைப் பற்றி என்ன சொன்னாலும் அதை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதையே தமிழக மக்களின் விமர்சனங்கள் காட்டுகின்றன. அதிலும் மக்கள் போராட்டங்களில் பங்கேற்றதற்காக வழக்குகளை எதிர்கொள்பவர்களைப் பற்றிப் பேச, மக்களுக்கு இடையூறு செய்ததற்காக போடப்பட்ட வழக்குகளால் சூழப்பட்டுள்ள தி.மு.க.வினருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை அவர்களே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.

Exit mobile version