கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி

கொரோனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன? என்றும், ஐ.நா.வின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும்? என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது கூட்டத்தில், காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 22 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது, 130 கோடி இந்திய மக்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த கூட்டத்தில் பேசுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கடந்த 9 மாதங்களாக கொரோனாத் தொற்று உலகை அச்சுறுத்தி வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, இதனால், தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஐ.நா. சபையின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், ஐ.நா. சபையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா? என இந்திய மக்கள் நீண்டகாலமாக காத்துள்ளனர் என சுட்டிக்காட்டிய பிரதமர், இதற்காக இன்னும் எவ்வளவு காலம் தான் காத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியா வளர்ந்தாலும், யாரையும் அச்சுறுத்தாத நாடாகவும், பலவீனமானால் யாருக்கும் பாரமாக இல்லாத நாடாகவும் உள்ளபோது, ஐ.நா. சபையில் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க குழுவில், இந்தியாவை இடம்பெறச் செய்வதில் அப்படியென்ன தயக்கம் இருக்கிறது என்றும் பிரதமர் சாடினார்.

இந்தியா எப்போதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

Exit mobile version