காணாமல் போனதாக கூறப்பட்ட முகிலன், 140 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் சிக்கியுள்ளார். தன் மீதான பாலியல் புகார் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே, முகிலன் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தாரா..? என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர் என்று தன்னை தானே அடையாளப்படுத்தி கொண்ட முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி திடீரென மாயமானார். மதுரை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்பட்டது. இந்த புகாரை விசாரித்த எழும்பூர் ரயில் நிலைய காவல்துறையினர், வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தனர்.
முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. 140 நாட்களாக முகிலனை, சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், திருப்பதியில் இருந்த முகிலனை, ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையிலும், தமிழக காவல்துறையினரை அலையவிடும் நோக்கிலும், 140 நாட்களுக்கும் மேலாக முகிலன் எதற்கு தலைமறைவாக இருந்தார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
முகிலன் தலைமறைவாக இருந்த நேரத்தில் அவர் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். சமூக செயற்பாட்டாளர் என்று கூறிக்கொண்ட முகிலன், பாலியல் புகாரால் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருந்தாரா.? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.