என்னம்மா அங்க சத்தம்? இணையத்தைக் கலக்கும் கிளப் ஹவுஸ்

 

‘கற்றிலன் ஆயினும் கேட்க’ என்ற திருக்குறளின், டிஜிட்டல் வடிவம்தான் PODCAST. இதன் அண்மைக்கால அப்டேட்டாக களத்தில் இறங்கி கலக்கி வருகிறது க்ளப் ஹௌஸ் செயலி.

ஜூம், கூகுள் மீட், வின்டோஸ் டீம்ஸ் என, ஆன்லைன் மீட்டிங்குகளால் , தடையற்ற பேச்சுவார்த்தைக்கு தாராளமாக வாய்ப்பளித்த தொழில்நுட்பம், இதனை இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த நினைத்ததன் விளைவே இந்த ஹௌஸ் கிளப் முறையிலான ஆடியோ கூட்டங்கள்.

வீடியோவுக்காக செய்யப்படும் முன்னேற்பாடுகள் தொடங்கி, பின்னணி அலங்காரம் உட்பட குறைந்தபட்ச ஒப்பனைகளையும் கூட தேவையற்றதாக்கிவிட்டு, பேசப்படும் விஷயத்தை கவனிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பளிக்கின்றன இந்த ஆடியோ கூட்டங்கள்.

இந்த முறைமை நமக்குப் புதிதில்லை என்றபோதும், கிளப் ஹவுஸ் மட்டும் இவ்வளவு பிரபலமாகக் காரணம் என்ன?

வாட்சப் சிக்கல் வந்தபோது, நான் ’சிக்னல்’ ஆப்பை பிரபலப்படுத்திய, international திங்க் டேங்க் இலான் மஸ்க், “மூளையை இயக்கும் எந்திரம்” குறித்து கிளப் ஹவுஸில் அறிவித்தார். கூடாத குறைக்கு ஃபேஸ்புக் ஓனர் மார்க்கும், கிளப் ஹவுஸுக்கு போட்டியாக நாங்களும் அதேபோல ஒன்றை வடிவமைத்து வருகிறோம் என்று, கிளப் ஹவுஸிலேயே பேசி மாஸ் காட்ட தானாகவே விளம்பரமானது கிளப் ஹவுஸ். கூடவே, அழைப்பு இருந்தால் மட்டுமே, கலந்து கொள்ள முடியும் என்ற வசதி, டிஜிட்டல் உலகின் மிகப்பெரும் தேவையான பாதுகாப்பையும் உறுதி செய்வதுபோல் தெரிய, பலரும் இந்தப்பக்கம் சாயத் தொடங்கினர்.

மொத்தத்தில் அதிமுக்கியமான தொழில்நுட்ப ஆளுமைகள் அவர்களுக்கே தெரியாமல் அம்பாசிடர்களாக மாற, சூடுபிடித்தது ‘க்ளப் ஹௌஸில் ரூம் போடும்’ போட்டி.

ஆனால், ட்விட்டர் ஸ்பேசஸ் வந்தாச்சு. ஃபேஸ்புக் வெகுவிரைவில் அறிவிக்கும். எனில், “சும்மா பேசிட்ருக்க மாமா” என்பதற்கே மூன்று ஆப்புகள் இனி நம் போனில் இருக்கும். ஆனால், மீண்டும் மீண்டும் விர்ச்சுவல் விழாமேடைகளுக்கே நம்மை இட்டுச்செல்லும் இந்த அயல் உலகங்கள், நம் செயல் வேகத்தை செல்லரித்துப்போகக்செய்யும் அபாயம் உண்டென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆப் இருக்கிறது என்பதற்காகவே சேர வேண்டுமா, அல்லது, தேவை இருந்தால்தான் சேர வேண்டுமா என்பதுதான் இந்த நேரத்தில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய மில்லியன் டாலர் கேள்வி.

Exit mobile version