தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரைசெயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை செயல்படலாம்.
27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கவும், மண்பாண்டம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது
மிக்சி கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.
செல்போன் விற்பனை கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், மிக்சி, கிரைண்டர், டி.வி.பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படுகின்றன.
ஏற்றுமதி நிறுவனங்கள், மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருட்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
இதே போன்று, இதர தொழிற்சாலைகளும் 33 சதவீத பணியாளர்களுடன், வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏற்கனவே நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் அடையாள அட்டையுடன் பணிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர்.
Discussion about this post