லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெளிநாட்டு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக, லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சரை, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் ஆரவாரமாக, வழியனுப்பி வைத்தனர். இந்தநிலையில், லண்டனம் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பூங்கொத்துகள் கொடுத்து, லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இங்கிலாந்தில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகளை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளார். பின்னர், அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்துஜா உள்ளிட்ட பல தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் முதலமைச்சர், காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான நிறுவனத்தையும் பார்வையிட உள்ளார். இது தவிர இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் முதலமைச்சர் பழனிசாமி, சந்திக்க உள்ளார்.
Discussion about this post