உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களை தன் வசம் வைத்திருக்கிறது யூடியூப். இந்த நிலையில் 10 கோடி சந்தா தாரர்களைப் பெற்ற முதல் தனிநபர் யூடியூப் பதிவர் என்ற பெருமையை ‘பியூடைபை’என்பவர் பெற்றுள்ளார்.
சுவீடனைச் சேர்ந்தவர் பியூடைபை. 1989ல் பிறந்த இவர், தனது பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டவர், தொழில் பயிற்சியிலும் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் பியூடைபை என்ற தனது பெயரிலேயே யூடியூப் சானல் ஒன்றைக் கடந்த 2010ஆம் ஆண்டில் இவர் தொடங்கினார். இதன் பிரதான நோக்கம் வீடியோ கேம்களுக்கு விமர்சனங்களைக் கொடுப்பது. இவரது நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் யூடியூபில் சந்தா தாரர்களை ஈர்த்தன. 2012ஆம் ஆண்டில் 10 லட்சம் பார்வையாளர்களை எட்டிய இவரது யூடியூப் சானல் 2013ஆம் ஆண்டில் 6 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. இதன் மூலம் அதிகபட்ச பார்வையாளர்களைக் கொண்ட முதல் தனிநபர் யூடியூப் சானலாக இது அங்கீகரிக்கப்பட்டது. வீடியோ கேம்கள் சந்தையில் இவரது விமர்சனங்கள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின. 2016ஆம் ஆண்டில் இவரது வீடியோக்கள் யூடியூபில் அதிகபட்ச பார்வையாளர்களைப் பெற்ற வீடியோக்களாக புகழ்பெற்றன. இதனால் 2016ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற டைம்ஸ் இதழ் ‘உலகின் 100 செல்வாக்குள்ள மனிதர்கள்’ பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்தது. இப்போது ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இவருக்கு யுடியூப் மூலம் கிடைக்கிறது. புகழைப் போலவே பல சர்ச்சைகளும் பியூடைபையைச் சுற்றிவந்தன. இவரது ரசிகர்கள் பொது மக்களின் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து இவருக்காக விளம்பரம் செய்ததும், யூத வெறுப்பு பற்றிய இவரது சர்ச்சைக் கருத்துகளும் உலக அளவில் கவனம் பெற்றவை. அனைத்தையும் கடந்து, கடந்த ஆகஸ்டில் ஆறரை கோடி சந்தாதாரர்களைப் பெற்றிருந்த இவரது சானல் இப்போது 10கோடி சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
யூடியூபில் இவரை முந்தி, முதல் இடத்தில், இந்திய பாடல் வெளியீட்டு நிறுவனமான ‘டீ-சீரீஸ் 10 கோடியே 90 லட்சம் சந்தாதாரர்களுடன் உள்ளது, இவருக்கு அடுத்த இடத்தில் மினிட்ஸ் கிராப்ட்ஸ் – என்ற கைவினைப் பொருட்கள் பற்றிய யூடியூப் தளம் 6 கோடி வாடிக்கையாளர்களுடன் உள்ளது.
கடந்த வாரம்தான் பியூடைபை தனது நீண்டநாள் காதலியான மார்சியாவை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வீடியோ யூடியூபின் சர்வதேச டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பெற்றது. இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 25 அன்று இவரது யூடியூப் பக்கம் 10 கோடி பார்வையாளர்களை எட்டிய செய்தி வெளியானவுடனேயே, அடுத்த சில நிமிடங்களில் இவரது சந்தா தாரர்கள் எண்ணிக்கை மேலும் ஒரு லட்சம் அதிகரித்தது. இதனால் இவருக்கு யூடியூப் நிறுவனமே ஒரு வீடியோவை வெளியிட்டு வாழ்த்தும் தெரிவித்து உள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் முதல் வீடியோவை வெளியிட்ட ஒரு இளைஞர், இன்று யூடியூப் தளமே வீடியோ வெளியிட்டுப் பாராட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post