இந்தியாவை யாராலும் உடைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து பேசிய அவர், இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய பாஜக அரசு மற்றும் வீரர்களுக்கு துணையிருப்போம் என்றும் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், இந்த சம்பவம் மிகவும் அறுவறுக்கத்தக்கது என்று தெரிவித்தனர். நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசு மற்றும் நமது பாதுகாப்புப் படைக்கு காங்கிரஸ் துணையிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது மிகவும் மோசமான சம்பவம் என்று கூறிய ராகுல்காந்தி, நமது வீரர்களுக்கு எதிராக நடத்தப்ப்டடுள்ள இந்த தாக்குதல் மிகவும் அறுவறுக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த அமைப்பும் இந்தியாவை உடைத்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்தினருடன் காங்கிரஸ் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். தீவிரவாத இயக்கங்களுடன் எந்த விதமான சமரசத்தையும் நாம் எப்பொழுதும் செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post