சிங்கப்பூர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை. நேரில் பார்த்து நெகிழ்ந்த குடும்பத்தினர்.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் துபாய்க்கு சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் பாத்ரூமில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது நாடு முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது மட்டுமின்றி பெரும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
அந்த சர்ச்சை ஒருவழியாக அடங்கிய நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி ஸ்ரீதேவியின் 56வது பிறந்த நாள் அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அந்தச் சூழலில், உலகப் புகழ் பெற்ற மேடம் டுஸார்ட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் ஏற்கனவே அங்குள்ள பாரக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், கஜோல், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்ற புகழ் பெற்றவர்களின் மெழுகுச் சிலைகளோடு, நடிகை ஸ்ரீதேவிக்கும் சிலை வைக்க உள்ளதாக அறிவித்தது.
அதன் அடிப்படையில், 20 சிற்பக் கலைஞர்களை கொண்டு கடந்த ஒரு மாதமாக ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டது. இதற்கென ஸ்ரீதேவி குடும்பத்தினரிடம் ஆலோசனைகளும் பெறப்பட்டன. இதன் திறப்பு விழா, இன்று(செப்.4) சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் சிலையோடு அவரது குடும்பத்தினர் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Discussion about this post