தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலும் தமிழக அரசு பல வகைகளில் முயன்று சென்னையின் குடிநீர் தேவையை சமாளித்துவருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனப்படுத்தலாம் என சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.என்.ஹரிஹரன் வலியுறுத்திய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.
ஷவரில் நம்மை நாமே மறந்து ஆனந்த குளிக்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
‘வெஸ்டர்ன் டாய்லெட்’டை பயன்படுத்திய பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை கழிப்பறைகளை பயன்படுத்தும்போது 1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும். எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரையிலான தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.
வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
Discussion about this post