நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள நீர்த்தேக்கம் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும். இதன்மூலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்கியபின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணை முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டியது.
இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து ஏழாயிரத்து 624 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32 புள்ளி 8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 4 ஆயிரத்து தொள்ளாயிரம் கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2700 கன அடி என மொத்தம் 7 ஆயிரத்து 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்து அங்கிருந்து மீண்டும் ஆற்றில் பாய்கிறது. கொடிவேரி அணையில் இருந்து அதிவேகத்தில் நீர் வெளியேறுவதால் பாதுகாப்புக் கருதிப் பொதுமக்கள் குளிப்பதற்குப் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் முன்கூட்டியே தடை விதித்துள்ளனர். கொடிவேரி அணையில் நொடிக்கு இரண்டாயிரம் கனஅடிக்கும் குறைவாக நீர் வெளியேறும்போது மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் எனப் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post