நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பகுதிகளில் மழை இல்லாததால் கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 112 அடிக்கு கீழாக சரிந்தது. முல்லைப் பெரியாறு அணையை பொருத்தவரை 108 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுத்து உபயோகப்படுத்த முடியாது என்பதால் வெறும் 4 அடி நீர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு கூட குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. மேலும் அணையிலிருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஒரு மாதத்திற்கு பிறகு அணைக்கு நீர்வரத்து துவங்கியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.