H1B விசா தொடர்பாக, அமெரிக்கா ஒரு சில நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக வெளியான தகவல், இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தை, H1B விசா தொடர்பானது அல்ல என்று அமெரிக்கா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. H1B விசா என்றால் என்ன..? அதை எப்படி பெறலாம் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…
இந்திய இளைஞர்களின் கனவு தேசத்தில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் வேலைக்காக அமெரிக்காவிற்கு சென்று, அங்கேயே குடும்பத்துடன் வாழ்கின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, H1B விசா தொடர்பாக விவாதங்கள் தலைப்புச் செய்திகளாக உலா வருகின்றன.
வெளிநாட்டிற்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ கொடுக்கப்படும் அனுமதிக்கு விசா என்று பெயர். வணிகம், சுற்றுலா, பார்வையாளர், விளையாட்டு, கலாச்சாரம் என பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் வேலை செய்வதற்காக H1B விசா வழங்கப்படுகிறது. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில், திறன்வாய்ந்த நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
1990-களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் அசூர வளர்ச்சி அடைந்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அமெரிக்காவில் தொழில்சார் மனித வளங்கள் தேவையான அளவு இல்லாததால், அந்தப் பணிகளில் வெளிநாட்டை சேர்ந்தவர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அவ்வாறு அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. குடியேற்றச் சட்டம் 1990 கீழ் H1B விசாவுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுமதி கொடுத்தார்.
அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின் கீழ் வருகிறது.
அமெரிக்க அரசு ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான H1B விசாக்களையே வழங்குகிறது. 3 பிரிவுகளின் கீழ் H1B விசாக்கள் வழங்கப்படுகின்றன. பொது ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டொன்றுக்கு 65,000 விசாக்கள் வழங்கப்படுகிறது. இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 20,000 விசாக்கள் வழங்கப்படும். இந்த விசாவிற்கு அனைவரும் விண்ணப்பிக்க முடியாது. தடையில்லா வர்த்தக பிரிவின் கீழ் சிங்கப்பூர் மற்றும் சிலிக்கு 6,800 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
H1B விசாக்களுக்கான தேவை அதிகம் என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படும். பெரு நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கிறது. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன.
H1B விசாவிற்கான கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை இருக்கும்.
நிறுவனத்தின் அளவைப் பொறுத்து கட்டண விகிதம் மாறுபடும். 50-க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனம் அல்லது ஒரு நிறுவனத்தின் 50 சதவிகித ஊழியர்கள் H1B விசா வைத்திருப்பவர்கள் என்றால், அவர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். H1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.
H1B விசா பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பு விசா பெற்று H1B விசா பெற்றவருடன் தங்கலாம். இதற்காக அவர்கள் H4 விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மனைவி மற்றும் 21 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த சார்பு விசாவிற்கு தகுதியானவர்கள். H4 விசா வைத்திருப்பவர்கள் தங்கள் கல்வியை அமெரிக்காவில் தொடரலாம். இருப்பினும், அவர்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பை பெற முடியாது. அவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமெனில் அதற்காக வேலை அனுமதி பெற வேண்டும்.
H1B விசா மூலம் வெளிநாட்டினர் பணியமர்த்தப்படுவதால், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதாக கூறி, H1B விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடுகள் விதித்தது.
இதனால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை எழுந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தை என்பது H1B விசா தொடர்புடையவை அல்ல என்றும், இது வழக்கமான பேச்சுவார்த்தை தான் என்றும் அமெரிக்கா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.
Discussion about this post