சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கிய வால்ட் டிஸ்னி நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் இன்று.
1901ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, சிகாகோவில் பிறந்த வால்ட் டிஸ்னிக்குச் சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதென்றால் அவ்வளவு ஆனந்தம். குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே தன் தந்தையுடன் சேர்ந்து வீடுவீடாகச் செய்தித்தாள் போடும் வேலையைச் சிலகாலம் செய்துவந்தார். பிறகு செய்தித்தாள்களில் `கார்ட்டூனிஸ்ட்’ பணிக்காகப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட டிஸ்னிக்கு, தோல்வியே பரிசாகக் கிடைத்தது. அதற்கு முதலாம் உலகப்போரும் ஒரு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகச் சிலகாலம் வேலைசெய்தார். பிறகு, ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றில் வர்ணனையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். இங்குதான் டிஸ்னியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அபிஜவெர்க்ஸைச் சந்தித்தார். 1923 அக்டோபர் 16 அன்று தனது நண்பர் மற்றும் சகோதரர்களுடன் இணைந்து டிஸ்னிபிரதர்ஸ் கார்டூன் ஸ்டுடியோவை கலிபோர்னியாவில் தொடங்கினார் டிஸ்னி.
தொடக்கக் காலத்தில் செகண்ட்-ஹேண்ட் கேமரா வாங்கி, சுமார் ஒன்றரை நிமிட அனிமேட்டெட் விளம்பரங்களைத் தயாரித்து, உள்ளூர் திரையரங்கங்களுக்கு அனுப்பிவைக்கத் தொடங்கினர். பிறகு, ஆலீஸ் இன் தி கார்ட்டூன் லேண்ட்’ (Alice in the cartoon land) என்ற 7 நிமிடக் கேலிச்சித்திரத்தை உருவாக்கினர். 1928ஆம் ஆண்டு, இசை, குரல் என கார்ட்டூன் திரைப்படத்துக்கு வேறுபட்ட தோற்றத்தைக் கொடுத்து, `Steamboat Willie’ எனும் அனிமேட்டெட் கார்ட்டூன் படத்தை வெளியிட்டனர். அதுஅந்த ஆண்டின் சிறந்த ஹிட் படமாய் அமைந்தது. அதில் நடித்திருக்கும் குறும்புக்கார சுண்டெலிக்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. `மிக்கி மவுஸ்’ என்ற அந்தக் குறும்புக்கார எலி தான் இன்று வரை டிஸ்னியின் அடையாளமாக மாறிப்போனது.
மிக்கியின் வெற்றியைத் தொடர்ந்து, டொனால்டு டக், போன்ற கதாப்பாத்திரங்களையும் உருவாக்கினர். பிறகு படைப்பாற்றல் மிக்க இளைஞர்களைக்கொண்டு, புதுமையான படைப்புகளைத் தொடர்ந்து கொடுக்கத் தொடங்கியது டிஸ்னியின் கூட்டணி. அதன் பிறகு வெளியான டிஸ்னியின் படைபுகளான சிண்ட்ரெல்லா, ஸ்டார்வார்ஸ், டாய்ஸ்டோரி, பீட்டர்பேன், கார்ஸ், Pirates Of Caribbean போன்ற காதாபாத்திரங்களை உருவாக்கி அனிமேஷன் தொடராகவும் அனிமேஷன் திரைப்படமாகவும் வெளியிட்டது டிஸ்னி நிறுவனம். அந்தப் படங்கள் எல்லாமே செம ஹிட்.
டிஸ்னியின் தாயரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லயன் கிங் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள டிஸ்னி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நாயகன் சிம்பா, டிமான் பூம்பாவின் காதாபாத்திரமும் அதில் வரும் ஹக்குனா மட்டாட்டா பாடலும் இன்றும் நம்மை ஆப்பிரிக்கா காட்டுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கும். 80s Kids தொடங்கி 2K Kids வரை அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது டிஸ்னி. இப்படிப் பல அனிமேஷன் காதாபாத்திரங்களை உருவாக்கிப் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் இழுத்து வைத்திருக்கிறது டிஸ்னி என்பதுதான் மறுக்க முடியாத உண்மை..
Discussion about this post