இலங்கை அதிபர் தேர்தலில் 81.5% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இரவே தொடங்க உள்ளதால் நாளை காலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், அங்குப் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா, மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட 35 பேர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர். தேர்தல் பணியில் 4 லட்சம் அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் 60 ஆயிரம் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். ஒருசில நிகழ்வுகளைத் தவிர அமைதியாகவே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 81.5% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இரவே தொடங்குவதால் நாளை காலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post