தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, வாக்கு எண்ணும் அறையின் பரப்பளவு 2500 சதுர அடியில் இருந்து 4500 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 டேபிள்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் ஒரு அறையில் 28 டேபிள்கள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 3 ஆயிரத்து 372 டேபிள்களிலும், தபால் வாக்குகள் ஆயிரத்து 48 டேபிள்களிலும் எண்ணப்பட உள்ளன. தபால் வாக்குகள் தனி அறையில், தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் அறைகளில், தனிநபர் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றும் வகையில், 6 அடி இடைவெளியில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரைமணி நேர இடைவெளியிலும் சுற்றுக்களின் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில்,வாக்கு எண்ணும் அறையில் கண்காணிப்பு கேமாரா பொருத்தப்பட்டு எண்ணிக்கையை பார்வையிட எல்.இ.டி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் சாதாரணமாக அணியும் முகக்கவசத்துடன், முழு முகத்தையும் மறைக்கும் பிளாஸ்டிக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், என அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை காட்ட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. உடல்வெப்பநிலை 98 புள்ளி 6 டிகிரி பாரன்ஹீட்க்கும் மேல் இருப்பவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேபோல வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் செல்போனை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. கிருமிநாசினி, முகக்கவசம் விநியோகம் செய்ய சுகாதாரக் குழுவினர் முகாம் அமைத்துள்ளனர்.
Discussion about this post