சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தென் சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.என்.ரவி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும் அனைத்துத் துறைகளின் ஒப்பந்தப்புள்ளிகளுக்கும் ஆன்லைன் டெண்டர் மற்றும் மின்னணு டெண்டர் முறை பின்பற்றப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தங்கள் சுயலாபத்திற்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை அமல்படுத்தாமல் திமுக ஆட்சியில் காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் மின்னணு ஒப்பந்தபுள்ளி முறையை முழுமையாக அமல்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சராகஎஸ்.பி. வேலுமணி பொறுப்பேற்ற பின்பு தான், 2014 ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் டென்டர், இ டென்டர் முறை கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும் அனைத்து துறைகளின் ஒப்பந்தப்புள்ளிகளுக்கும் ஆன்லைன் டென்டர் மற்றும் இ டென்டர் முறை பின்பற்றப்படுகிறது எனவும் வி.என். ரவி தெரிவித்துள்ளார். அனைத்து உள்ளாட்சி துறைகளின் ஒப்பந்தபுள்ளிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஐசி போர்டல் மூலம் இயக்கப்படும் தமிழக அரசின் tn.tenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதுவே உள்ளாட்சித்துறையின் வெளிப்படைத் தன்மைக்கு ஒரு சான்று எனவும் வி.என். ரவி குறிப்பிட்டுள்ளார்.
20 கோடிக்கும் அதிகமான சிப்பமுறை மு.க.ஸ்டாலினால் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டதை மா.சுப்பிரமணியன் வசதியாக மறந்துவிட்டதாக விஎன் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்..
ஒஎம்ஜி என்று பரவலாக அழைக்கப்படும் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியான , சபரீசனால் இயக்கப்படும் அக்கப்போர் இயக்கமான அறப்போர் இயக்கம் தான், தமிழக அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்னிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.. இந்த இயக்கம் அளித்துள்ள பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஒப்பந்த புள்ளிகளும் இணையம் வழியாக ஒப்பந்தம் கோரப்பட்டவை எனவும் தெரிவித்தள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் பாலங்கள் கட்ட சரியாக திட்டமிடாமல், தேவையற்ற முறையில் 90 சிறு மேம்பாலங்கள் பினாமிகளுக்காக கூடுதல் மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.. பிட்டர்ஸ் சாலையில் தேவை இல்லாமல் கட்டப்பட்டுள்ள பாலத்தை பற்றி எழுதாத பத்திரிகைகளே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 285 கோடி செலவினத்தில் உலகத்தரம் வாய்ந்த சாலைகள் போடப்பட்டு, 38 கோடி ரூபாயை சேமித்துள்ள நிலையில், ஊழல் என்று திமுக தம்பட்டம் அடித்துவருவது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார். இதே போல சென்னை மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி துறைகளில், பல்வேறு திட்டங்கள் மதிப்பீட்டினை விட குறைவான தொகையில் முடிக்கப்பட்டுள்ளதற்கு சான்றுகள் பல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.லஞ்ச ஊழலில் திளைத்த திமுகவின் தீய செயல்பாட்டை மறைக்கவே மா.சுப்பிரமணியன் இத்தகைய வக்கற்ற அறிக்கையை விட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சேற்றை வாரி இறைத்து தனது தலைவர் ஸ்டாலின் ஜீரோ அல்ல ஹீரோ தான் என்பதை நிரூபிக்க சுப்பிரமணியன் படாத பாடுபட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். உள்ளாட்சி துறை அமைச்சர் மீது 1000 கோடி ரூபாய் ஊழல் என்று ஒப்பாரி வைக்கும் ஸ்டாலினுக்கு, சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட எம்.சாண்டின் மதிப்பே வெறும் 32.50 கோடி ரூபாய் என்பது தெரியாதா எனவும், ஆற்று மணலை விட எம் சாண்டின் விலை அதிகம் என்பதையும் அறியாமல் 1000 கோடி ரூபாய் ஊழல் என்று கூறுவது அபத்ததின் உச்சம் எனவும் வி.என். ரவி கூறியுள்ளார்.
இதையெல்லாம் தெரியாத மு.க.ஸ்டாலின் ஹீரோவா அல்லது ஜீரோவா என சொல்லுங்கள் எனவும் வினவியுள்ளார்.. மா.சு. என அழைக்கப்படும் மா.சுப்பிரமணியன் ஒரு அரசியல் மாசு என்பதை அவரது அறிக்கையே நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பால்மலரின் மர்மமரணம் தொடங்கி கம்யூனிஸ்ட்டுகளுக்கு பணம்கொடுத்தது , மிசா கைது , முரசொலி அலுவலக மூல பத்திரம் உள்ளிட்ட விவகாரத்தில் ஸ்டாலின் வாய்மூடி மௌனமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள , விஎன் ரவி, சாதிக் பாட்ஷாவின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அலைக்கற்றை ஊழல் வழக்கில் இருந்து தப்பித்துக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்..மாரத்தான் ஓட்டம் மூலம் புகழ்பெற்ற மா.சுப்பிரமணியன், தற்போது நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு மனைவி சகிதமாய் ஓடிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் எவ்வித மக்கள் திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக , தற்போது மாநிலத்தை முன்னேற்றிக்கொண்டிருக்கும் அதிமுக அரசு மீது சேற்றை வாரி இறைக்கும் நிலையில் அக்கட்சிக்கு, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் வி.என்.ரவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…
Discussion about this post