இந்தியா முழுக்க தற்போது பரபரப்பாக பேசப்படும் வார்த்தை மீ டூ. திரைத்துறையில் பலரும் இதற்கு ஆதரவுக் கரம் நீட்டிவரும் நிலையில், பாதிக்கப்படும் நடிகைகளுக்காக முன்னணி நடிகர்கள் களத்தில் இறங்குகின்றனர்.
பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது தெரிவித்த பாலியல் புகாரை தொடர்ந்து, நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, அமலாபால் மற்றும் நடிகர்கள் சித்தார்த், பிரகாஷ் ராஜ் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், பாலியல் துன்புறுத்தல்களுக்கு தான் எப்போதும் எதிரானவன் என்று கூறியுள்ளார்.
டுவிட்டரில் கருத்து கூறா விட்டாலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேச இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகை அமலாபால், மலேசியாவிலிருந்து, தெலைபேசி வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு அவரை சீண்டியவரை கைது செய்ய, தானும் நடிகர் கார்த்தியும் நடவடிக்கை எடுத்ததாக விஷால் தெரிவித்தார்.
அதேபோல், நடிகைகள் தங்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களை பற்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரச்சனை நடந்தவுடன் காவல் நிலையம் சென்று புகார் அளிப்பது போல் அல்லாமல், தொடக்கத்திலேயே தெரிவித்தால், அமலாபாலுக்கு உதவியது போல், தாங்கள் உதவ முடியும் என்று கூறிய விஷால், இத்தகைய பிரச்சனைகளை தடுப்பதற்காக, தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, மூவர் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.