வியாபாரத்திற்கு பெயர் பெற்ற வணிக நகரமான விருதுநகர் பகுதியில், எள் விளைச்சல் குறைந்துள்ளதால், எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
1960-களில் வெளிவந்த திரைப்படத்தில், மணப்பாறை மாடு கட்டி என்ற பாடலில், விருதுநகர் வியாபாரிக்கு வித்துவிடு செல்லக்கண்ணு என்று குறிப்பிடும் அளவிற்கு வியாபாரத்திற்கு பெயர் பெற்ற வணிக நகரம் விருதுநகர். விருதுநகரில் விளைபொருட்கள் ஏதும் பெரியளவில் விளையாத போதும், வியாபார நுணுக்கத்தின் காரணமாக பல வகையான உணவு பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சமையலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களில், மிகவும் முக்கியமான நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகள், விருதுநகர் பகுதிகளில்தான் தரமாகவும், சிறப்பான முறையிலும் தயாரிக்கப்படுகிறது.
எண்ணெய்களின் மொத்த சந்தையாக விளங்கும் விருதுநகரிலிருந்து, பல்வேறு பகுதிகளுக்கும் எண்ணெய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், குவைத், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் சமையல் எண்ணெய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நல்லெண்ணெயின் மூலப்பொருளான எள்ளின் உற்பத்தி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் குறைந்ததால், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக ஏற்றுமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறும் இவர்கள், பருவமழை பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்டுள்ள எள் விவசாயிகளுக்கு, தமிழக அரசு போதிய உதவிகளை செய்து, மகசூலை அதிகரிக்க செய்யவேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலையேற்றம் காரணமாக, ஏற்றுமதியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், எள் உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்தை காண முடியும் என்கின்றனர் எண்ணெய் உற்பத்தியாளர்கள்.
Discussion about this post