இந்திய அணி வீரர் விராட் கோலி, இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிக நபர்கள் பின்தொடர்பவர்களை பெற்று, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. 31 வயதான அவர், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது சாதனை ஒன்றை நிகழ்த்து வருகிறார். இதற்கிடையே, சமூக வலைதளங்களோடு இணக்கமாக உள்ள விராட் கோலி, போட்டிகளில் படைத்த சாதனைகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை எல்லாம் அவ்வப்போது பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 (5 கோடி) மில்லியன் ஆக உள்ளது. இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதுவரை 930 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்திய அளவில் விராட் கோலிக்கு அடுத்ததாக, முன்னணி இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா (49.9 மில்லியன்) உள்ளார். 3-வது இடத்தில் தீபிகா படுகோனே (44.1 மில்லியன்கள்) உள்ளார். நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மோடி, 34.5 மில்லியன் கோடி ஃபாலோயர்களுடன் 8-ஆம் இடத்தில் உள்ளார்.
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனோல்டா, இன்ஸ்டாகிராமில் அதிக நபர்கள் பின் தொடர்பவர்களை கொண்டுள்ளார். அவர், 200 மில்லியன் (20 கோடி) பின் தொடர்பவர்களை (பாலோயர்ஸ்) பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post