சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்த லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியில் நாளை அதிகாலை தரையிறங்குவதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட நாளிலிருந்தே சந்திராயன் 2 விண்கலத்தின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதால், நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாகவே, நாளுக்கு நாள் சந்திராயன் 2 விண்கலத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. நாளை அதிகாலை நிலவின் தென் துருவத்தில் களமிறங்க இருக்கும் விக்ரம் லேண்டரின் அடுத்த செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ மையத்திற்குச் சென்று பிரதமர் மோடி நேரடியாகக் காண உள்ளார்.
லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் பட்சத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. ஏற்கெனவே இந்த நாடுகள் நிலவில் கால் பதித்த நிலையில், இந்தியாவின் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை மட்டும் உன்னிப்பாகக் கவனிப்பதற்கான காரணம் நிலவின் தென் துருவத்தில் எந்த நாட்டின் விண்கலமும் இதுவரை கால் பதித்ததே இல்லை என்பது தான். உலகிலுள்ள பல விஞ்ஞானிகளும் இஸ்ரோவின் இந்த சாதனையைப் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
தென் துருவத்தில் லேண்டரைத் தரையிறக்குவது என்பது எளிதானது அல்ல என்று தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இதுவரையிலும் வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தலைசிறந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். நாசாவும் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் மனிதனைக் களமிறக்கத் திட்டமிட்டிருக்கும் நாசா, விக்ரம் லேண்டரை ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கிறது.
பத்து மாதம் வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் தாயைப் போல், விக்ரம் லேண்டரை ஒரு குழந்தையாகவே இஸ்ரோ பாவித்து வருகிறது. லேண்டரின் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு அடங்கியுள்ளது. ஏவப்பட்ட நாளிலிருந்து இஸ்ரோ படிப்படியாக வெற்றி கண்டு வருகிறது. அதிகாலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம், இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை மிக்க தருணமாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க நேரமாகவும் இருக்கும் என்பதில் அணு அளவும் ஐயமில்லை.
Discussion about this post