விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தகவல் தொடர்பு மீட்டமைக்கப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றி வட்டப்பாதையை அடைந்தது. அதில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால், கடைசி 2 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆர்ப்பிட்டர் மூலம் தகவல் தொடர்பை ஏற்படுத்தவும், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறியவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தகவல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில், தரையிறக்க நிர்ணயிக்க இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஆர்பிட்டரிலுள்ள தெர்மல் கேமரா அனுப்பிய புகைப்படத்தின்படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் உடனான தகவல் தொடர்பை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post