நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர் சண்முக சுப்பிரமணியனுக்கு, நாசா விஞ்ஞானிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய, கடந்த ஜுலை 22 ஆம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் 2 மூலம் விக்ரம் லேண்டர் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. நிலவு குறித்த ஆய்வில் மற்றுமொரு சாதனையாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்தில், யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு சறுக்கல் ஏற்பட்டது.
அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு தகவல் தொடர்பை இழந்தது. இதனால் விக்ரம் லேண்டரின் கதி என்னவென்று தெரியாமல், இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர். தரையிறங்கும் போது நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியதால் அதன் பாகங்கள் உடைந்து இருக்கலாம் என கூறப்பட்டது.
இருப்பினும் மர்மம் நீடித்த நிலையில், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் களமிறங்கினர். பலகட்ட முயற்சிகளுக்கு பின்பும் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டறிவதில் மிகப்பெரும் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தின் தரவுகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் இணையத்தில் வெளியிட, அதை வைத்து ஒரு சோதனை முயற்சியாக விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை அறிவதற்கு முயற்சி மேற்கொண்டார், மதுரையை பூர்விகமாக கொண்ட தமிழரான சண்முக சுப்பிரமணியன்.
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, நாசாவின் புகைப்படங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை துல்லியமாக கண்டறிந்து, அதை உறுதிப்படுத்தி, நாசாவுக்கும் மின்னஞ்சல் ஒன்றை சண்முக சுப்பிரமணியன் அனுப்பியிருக்கிறார். இதற்காக தினமும் 8 மணி நேரம் என நான்கு நாட்கள் முயற்சித்ததாக சண்முக சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதையடுத்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர் சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா விஞ்ஞானிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன், சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் நாசாவின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், சண்முக சுப்பிரமணியன் மின்னஞ்சல் மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாசா விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ள நிகழ்வானது, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
Discussion about this post