தொழில்நுட்பத்தின் பிடிக்குள் தமிழ்த் திரையிசை உலகம் செல்வதற்கு முன்பு அதன் உதவி பெரிதும் இல்லாமல் தனது திறமையின் வழியாக, மாபெரும் சகாப்தம் படைத்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். காலத்தால் அழியாத பல பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய, அவரது நினைவு நாள் இன்று….
1930-ல் ஆந்திராவில் பிறந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், 1951 ஆம் ஆண்டு சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். தமிழ்த் திரை இசையுலகில் டி.எம்.எஸ் புகழின் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில், பி.பி.ஸ்ரீனிவாஸ் தனது மென்மையான குரலால் இனிமையைக் கூட்டிப் பாடுவதில் தனக்கென ஒரு பாணியை கொண்டு வந்தார். குறிப்பாக ஜெமினி கணேசனுக்கு பிபிஎஸ் பாடிய காதல் பாடல்களும், மென் சோகப் பாடல்களும், இசை ஞானம் இல்லாதவர்களையும் கிறங்கடிக்கச் செய்யும் தெவிட்டாத தேனிசையாக அமைந்தன.
தொடர்ந்து பிபிஎஸ் பாடிய ‘மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?,’ என்ற பாடலில் உருகாதவர்கள் இருக்க முடியாது. அதுபோல ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை…’ என சோகத்தில் மூழ்குவதாகட்டும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘தாமரைக் கன்னங்கள்… தேன்மலர்க் கிண்ணங்கள்’, ‘என்னருகே நீ இருந்தால்…’ எனக் காதலில் களிப்பதாகட்டும்… பிபிஎஸ்ஸின் குரல் செய்யும் மாயாஜாலத்துக்கு நிகரில்லை.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு பிபிஸ்ரீனிவாஸ் பாடிய ஏராளமான பாடல்களும், அவரது சாதனை பயணத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 8 மொழிகளிலும் கவிதை புனையத் தெரியும் அளவுக்கு வல்லமை பெற்றவர் பிபிஸ்ரீனிவாஸ்.
Discussion about this post