நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி தலைமையில் நடைபெற்ற பேரணியை காவல் துறை துணை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் வட்டார போக்குவரத்து, காவல் துறை, போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு ஒலிப்பெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்து பேரணியாக சென்றனர்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் 30-வது சாலை பாதுகாப்பு வாரவிழா தற்போது தொடங்கி 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது. பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில், நடன கலைஞர்கள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதேபோல், நெல்லை மாவட்டம் தென்காசியில், பள்ளிப் பேருந்து, மற்றும் கார் ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மற்றும் வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோனை உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான ஓட்டுனர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Discussion about this post