திருமழிசையில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட உள்ளதால் கடைகள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு அதற்கு மாற்று ஏற்பாடாக திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள துணைக்கோள் நகரத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய இடைவெளியுடன் கூடிய சுமார் 200 தற்காலிக கடைகள் இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட் கலவைகள் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. காய்கறி வாங்க வரும் வியாபாரிகளின் வசதிக்காக தண்ணீர் தொட்டிகள், நகரும் கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், நுழைவு வாயிலில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இந்த தற்காலிக காய்கறி சந்தை செயல்படக்கூடிய நிலையில் கூடுதல் பணியாளர்களை கொண்டு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post