வீரபாண்டிய கட்ட பொம்மன் நினைவு தினம் இன்று அனுசரிப்பு

ஆங்கில மோகத்தில் தமிழ் மரபுகளையும் பண்பாடுகளையும் மறந்து போன இன்றைய தலைமுறையினருக்கு இவரை தெரியுமா? இந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக குரல் எழுப்பிய தமிழர்களில் முக்கியமானவர், மீசையை கம்பீரமாக முறுக்கிகொண்டு வெள்ளையனே வெளியேறு என்று கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரைக் கேட்கும்போதே கை கால்கள் சிலிர்க்கிறது அல்லவா?

பொம்மு வம்சாவளியில் வந்த ஜெகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமுகத்தமாளுக்கும் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிஞ்சியில் ஜனவரி மாதம் 3-ம் தேதி, 1760-ம் ஆண்டில் பிறந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும்.

1790-ம் ஆண்டில், 47-வது பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணையில் பொறுப்பு ஏற்றார். 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பை நிர்வகித்தார்.

தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழ்நாட்டை ஆட்சிசெய்யலாம் என நினைத்துக்கொண்டு இருந்த வெள்ளையர்களை எதிர்த்து அவர்களை கதிகலங்க வைத்த வீரன் கட்டபொம்மன். 1797-ல் முதன்முதலாக ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 மற்றும் 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்றுத் தெறித்து ஓடினார். பின்னர் ஜாக்சன், வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.

கட்டபொம்மனை அவமானப்படுத்த வேண்டும் எனக் கங்கணம் கட்டிகொண்டு திரிந்தான் ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அனைத்தையும் மாற்றினார். வரியை கேட்டு வந்த துரையிடம் ’யாருக்கு யார் வரி கட்டுவது? நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என வீர முழக்கமிட்டார் கட்டபொம்மன்.

கட்டபொம்மனை குற்றவாளி என்று பழி சுமத்தினான் வெள்ளையன், அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியார் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டான்.

கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுக்கவும் இல்லை. உயிர்ப்பிச்சை கேட்கவும் இல்லை. கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளைத் தோல்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று வீர முழக்கம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏறியபோதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தன. கட்டபொம்மனின் கலங்காத மன உறுதியை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கூட வியந்து தங்கள் பதிவுகளில் எழுதி உள்ளனர். தூக்குமேடை ஏறியபோதும், “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார். தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார். இதனை தொடர்ந்து ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 19-ம் தேதி, 1799-ம் ஆண்டில் கயத்தாறு கோட்டையில் ஒரு புளிய மரத்திலே தூக்கிலிடப்பட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வுபூர்வமான சுதந்திர போராட்டத்தின் முக்கிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது.

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்நாளில் நாமும் அவரின் வீரத்தை நினைவு கூறுவோம்…

Exit mobile version