எப்போதெல்லாம் இயக்குநர் பாலா படம் பற்றி அறிவிப்பு வெளிவருமோ அப்போதெல்லாம் அவரின் திரைக்கதைப் பற்றிய பரபரப்பு வதந்திகள் வலம் வரத் துவங்கும். நாச்சியார் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் மகன் துருவ்-ஐ வைத்து “வர்மா” திரைப்படத்தை இயக்கினார் பாலா.
தெலுங்கில் வெற்றிப்படமான “அர்ஜுன் ரெட்டி”யின் ரீமேக் என்று சொல்லப்பட்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என வரிசையாக வெளிவந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற நிலையில், இத்திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு பின் வாங்கியது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இ4 நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ் வெர்ஷன் தங்களுக்கு திருப்தி இல்லை என்றும், ஒரிஜினல் அர்ஜுன் ரெட்டிக்கும், இப்போது எடுக்கப்பட்டுள்ளதுக்கும் அதிக வேறுபாடு உள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என்பதால் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது. மேலும் வர்மா திரைப்படம் வேறு வெர்ஷனில் மீண்டும் எடுக்கப்பட்டு புதிய திரைப்படம் ஜுன் மாதத்தில் வெளியாகும் என்றும் இந்த படத்திலும் துருவ் நாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதிய இயக்குநர் தலைமையிலான குழு இந்த படத்தை இயக்கும் என தயாரிப்பு நிறுவனமானஇ4எண்டர்டெய்ன்மென்ட் தெரிவித்துள்ளது.
Discussion about this post