தமிழக அரசின் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமானது, மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தற்போது நவராத்திரி, தீபாவளி பண்டிகையை ஒட்டி, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக நவராத்திரி விற்பனை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியை செப்டம்பர் 18ம் தேதி ஊராட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நவராத்திரி விற்பனை கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அரங்குகளை அமைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கக்கூடிய அரிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இயற்கை தானியங்கள், கைவினைப் பொருட்கள், பருத்தி ஆடைகள் , அழகு பொருட்கள், தஞ்சாவூர் பொம்மைகள், மரச்செக்கு எண்ணெய், அச்சு முறுக்கு, அதிரசம் என பலவகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கையான முறையில் செய்யப்பட்ட நொறுக்குத்தீனிகள், கையில் நெய்யப்பட்ட கைப்பைகள், ஓவியங்கள் பெண்களுக்கான ஆபரணங்கள், அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவை கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
நியாயமான விலையில் விற்கப்படுவதால், பார்வையாளர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
மகளிர் மேம்பாட்டுக்காக தமிழக அரசு எடுத்து வரும் இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர் . மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு எவ்வித வாடகையும் இன்றி இந்த அரங்கம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 18ம் தேதியிலிருந்து அக்டோபர் 18 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இலவசமாக இந்த அரங்கில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பொருட்களை எவ்வித வாடகையும் இன்றி விற்பனை செய்து கொள்ளலாம்.
இந்த விற்பனை அரங்குகள் கொண்ட கண்காட்சி வாடிக்கையாளர்களை பெருமளவில் கவரும் வகையில் அமைந்துள்ளது.
Discussion about this post