பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பழனி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பழனி பகுதியில் உள்ள வரதமாநதி, பாலாறு மற்றும் பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரதமாநதி முழுகொள்ளளவான 66 அடியை எட்டியது. இதனால் அணைநிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் அணைக்கு வரும் 450 கனஅடி நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இவை ஆயக்குடி, கணக்கண்பட்டி, அமரபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு செல்கிறது. அணைகளும் குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாலாறு- பொருந்தலாறு அணை, குதிரையாறு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்னும் இரண்டு தினங்களில் அணை நிரம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post