திண்டுக்கல் மாவட்டம் வரதமாநதி அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு வரும் 25 தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து மக்களின் கோரிக்கை ஏற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள அவர், முதல் போக சாகுபடிக்கு வரும் 25ஆம் தேதி முதல் 127 நாட்களுக்கு பழனி வட்டம், பாப்பன் வாய்க்கால், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 குளங்களில் இருந்தும் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 523 புள்ளி 18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூலை பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே போல் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 25 ஆம் தேதிமுதல் 130 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் எனவும், இதன் மூலம் சுமார் 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post