இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து நேற்று வெளியான திரைப்படம் வந்த ராஜா வா தான் வருவேன். தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த அத்தரிண்டிக்கு தாரேதி படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த படம்.
உலகின் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார வீட்டில் பிறந்தவர் ஆதி (சிம்பு ). பல கோடி பணம் இருந்தும், மனதில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என்று சொல்லும் தாத்தா(நாசர் ) ரகுநந்தனின் நிம்மதியும் சந்தோஷமுமான அவரது மகள் (ரம்யா கிருஷ்ணன்), காதல் திருமணம் செய்துகொண்டதால் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார்.
அவரது மகளை கடைசிக்காலத்தில் பார்க்கவேண்டும் என்ற தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற, வெளிநாட்டில் இருந்து சென்னை வருகிறார் சிம்பு. அப்படி வரும் சிம்பு தனது அத்தை ரம்யா கிருஷ்ணனை, தாத்தாவை பார்ப்பதற்காக அழைத்து வருவாரா என்பது தான் கதை.படம் முழுவதும் நிறைய நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள இந்த படம், குடும்பங்கள் பார்த்து ரசிக்கும் திரைப்படமாக உள்ளது.
சிம்பு என்றால் நடனம் தான். ஆனால் உடல் எடை அதிகம் ஆனதால், நடனம் ஆட கடினப்படுகிறார் சிம்பு . அதை ஈடுகட்ட, ரசிகர்கள் ரசிக்கும் படி, படம் முழுவதும் வசனங்களின் மூலம் ஸ்கோர் செய்துள்ளார்.
சிம்புவின் அத்தையாக வரும் ரம்யாகிருஷ்ணன் (நந்தினி பிரகாஷ் ), அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் பிரபு (பிரகாஷ்). இவர்களுக்கு இரண்டு மகள்கள் கேத்தரின் தெரசா (பிரியா பிரகாஷ் ) மற்றும் மேகா ஆகாஷ் (மாயா பிரகாஷ் ). சென்னை வந்த சிம்பு தனது மாமா பிரகாஷ் இதய வலியால் துடிக்கும் பொழுது சரியான நேரத்தில் காப்பாற்றுகிறார்.
குணம் அடைந்த பிரகாஷிடம் (பிரபு ), வேலை இல்லாதவர் என்று சிம்பு அறிமுகப்படுத்திக்கொள்ள, டிரைவர் வேலையை கொடுத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார் பிரகாஷ். அத்தையின் முதல் பெண்ணை காதலித்து திருமணம் செய்து விடலாம் என்று முடிவு செய்யும் சிம்பு, அவள் வேறு ஒரு பையனை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். அத்தை மகளையும், வேறு ஒரு பெண்ணோடு, கல்யாண கோலத்தில் இருக்கும் மாப்பிளையான அவளுடைய காதலன் மஹத்தை கடத்தி வந்து, இருவரையும் சேர்த்து வைக்கிறார்.
இதற்கிடையில், இரண்டாவது மகள் சிம்புவை விரும்புகிறார். சிம்பு யார் என்று தெரிந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன், தனது இரண்டாவது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறார். இரண்டாவது மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கிறது. அதே சமயத்தில் தாத்தாவின் உடல் நிலையும் மோசமாகி வருகிறது.
ஒருபுறம் காதலி, மறுபுறம் தாத்தா, இன்னொருபுறம் அத்தை என மூன்று திசைகளிலும் சிக்கிக் கொள்ளும் சிம்பு, அந்த சூழலை எப்படி கையாளுகிறார் என்பது படத்தின் இறுதி காட்சி.ரோபோ ஷங்கர், விடீவி கணேஷ், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் என, அனைவரும் படத்தில் தொய்வு ஏற்படாமல் காமெடியோடு கதையை இழுத்து செல்கின்றனர். இரண்டாம் பாகத்தை நகர்த்தும் பொறுப்பை யோகிபாபுவிடம் கொடுத்துள்ளார் இயக்குனர். அதற்கேற்ப சிறப்பாக செய்து இருக்கிறார் யோகிபாபு.
படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. ஆனால், நிறைய இடங்களில் அதிகமான சப்தம், கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது. ஹிப்பாப் ஆதி இசையில் வரும் எனக்கா ரெட்காட்டு பாடல் மனதில் திரும்ப ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் எல்லாம் சுமாராகவே உள்ளது.படம், பாடல் என பெரும்பாலான காட்சிகள், செட்டுக்குள்ளேயே நகர்வதுபோன்ற உணர்வைத்தான் கொடுக்கிறது. சில காட்சிகள் மட்டும் தான் கண்களுக்கு நிறைவை தருகிறது.சண்டைக் காட்சிகளில் சிறிய அடிக்கூட படாமல், அனைவரையும் பந்தாடுகிறார் சிம்பு. ஆனால் இறுதி காட்சிகளில் சென்டிமென்ட்டாக ஸ்கோர் செய்து, அனைவரின் மனதிலும் இடம்பெறுகிறார்.
இந்த படத்தை பார்க்கும் போது, விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் சாயல் தெரிகிறது. ஆனால், இது சிம்பு நடித்த படம் என்பதை அவ்வோபோது நினைத்துக்கொள்ளவும்.இருந்தபோதிலும்,சிம்பு ரசிகர்களுக்கு பிடித்த படமாக இந்த படம் அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
Discussion about this post