பல மாகாணங்களாக சிதறி இருந்த இந்திய தேசத்தை ஒருங்கிணைத்து, இரும்பு மனிதர் என்று அழைக்கபட்ட சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த தினம் இன்று….
பிரிந்து கிடந்த பாரத தேசத்தை ஒன்றிணைத்தவர் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத்தில் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயது முதல் படிப்பில் சிறந்த மாணவராக விளங்கிய படேல் வழக்கறிஞராக வேண்டும் என்ற தாக்கத்தில் இருந்த அவர் தனது 25 வயதில் டிஸ்ட்ரிக்ட் பிளிடர் படிப்பை முடித்தார். பின்னர் 1910 ஆம் ஆண்டு லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பிய பிறகு அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியினை தொடங்கினார்.
அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைக்காக போராடி அவர்களின் இதயத்தில் இடம் பிடித்தார் பட்டேல். 1917 ஆம் ஆண்டு முதன் முறையாக மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் பிரபலமாக மக்கள் மத்தியில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையினை கேட்ட அவர், வழக்கறிஞர் தொழிலை விடுத்து தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துகொண்டார். மக்களுக்காக போராட்டம் நடத்திய பட்டேலுக்கு போராட்டமும் சிறைவாசமும் வாடிக்கையாகிப்போனது.
அதனை தொடர்ந்து காந்தி நடத்திய பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டு தோல்விக்கு பிறகு மகாத்மா காந்தியும் படேலும் கைது செய்யபட்டு ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கபட்டனர். அங்குதான் காந்தியும், பட்டேலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட தருணம் ஆகும். அதன் பிறகு காந்தியின் கொள்கையினை பின்பற்றி நடந்தார். 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் ஆற்றிய பணிகள் சாதாரணமானது அல்ல.
சுதந்திரம் அடைந்தும் நாடு முழுவதும் பல தன்னாட்சி மாகாண ஆட்சிமுறை பரவலாக இருந்தது. இதில் 565 ராஜ்ஜியங்கள் சிதறுண்டு கிடந்தது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் பொறுப்பை பட்டேலிடம் ஒப்படைத்தார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. பல போராட்டங்கள், சர்சைகளுக்கு மத்தியில் இந்திய நாட்டை ஒருங்கிணைத்து இரும்பு மனிதர் என்று அழைக்கபட்டார் பட்டேல். தன்னுடைய 75 ஆவது வயதில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி காலமானார். அவரது சாதனைகளை போற்றும் விதமாக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1999 ஆம் ஆண்டு வழங்கபட்டது.
இவரை இன்னும் கவுரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு குஜராத்தின் காந்தி நகரில் 597 அடியில் உலகிலேயே மிகப் பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறக்கப்பட்டது.