டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். விரைவில் தேர்தலில் சந்திக்கவுள்ள அதிபர் டிரம்ப் அரசியல் லாபத்திற்காக இந்தியா வரவுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு வருவதால் டிரம்ப் அடையவுள்ள அரசியல் லாபமென்ன ? சிறப்பு செய்தி தொகுப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக வரும் பிப்ரவரி 24ம் தேதி இந்தியா வருகிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சென்னை எவ்வாறு தயாரானதோ அதுபோலவே டிரம்பை வரவேற்க குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரும் தயாராகி வருகிறது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் அகமதாபாத் நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
மோடி டிரம்ப்பை வரவேற்று பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. டிரம்பை வரவேற்க விமான நிலையம் துவங்கி வழி நெடுகிலும் 28 இடங்களில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக நாடு முழுவதும் இருந்து இசைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபரை வரவேற்க இதுபோன்ற தடபுடலான ஏற்பாடு செய்வது ஒருபுறம் விமர்சனத்தை சந்தித்தாலும் மறுபுறம் வரவேற்பும் பெற்றுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னையில் தங்கியிருந்த இரண்டு நாட்கள் அவருக்காக சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டது. ஒரு விருந்தினர் போல ஜின்பிங் உபசரிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது
பொதுவாக சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான டிரம்ப்பை கவனமுடன் கையாள்வது இந்தியாவுக்கு மறைமுகமாக பல்வேறு நன்மை பயக்கும். ஏனென்றால் ஜம்மு காஷ்மீர் விவகாரம், ஐநாவில் நிரந்தர உறுப்பினர், அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது
அதிபர் டிரம்புடன் அவருடைய மனைவி மெலனியா, மகள் இவாங்க டிரம்ப் மற்றும் வர்த்தக, பாதுகாப்பு ஆலோசகர்கள் 12 பேர் இந்தியா வருகின்றனர். இந்திய வருகையின் போது வர்த்தக மற்றும் பாதுகாப்பு துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்கவுள்ள அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகை பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது.
அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செல்வாக்கு தொடர்ச்சியாக சரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு அதிபர் தேர்தலின் போது டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் தள்ளிப் போயுள்ளன. உதாரணமாக மெக்சிகோ நாட்டு எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய சுவர் எழுப்பப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் 3ஆயிரத்து 141 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையில் சுவரெழுப்பும் பணி முழுமையாக நிறைவடையாதுடன் கட்டப்பட்ட சுவர்களில் பல பகுதிகள் சூறாவளி காற்றின் காரணமாக சாய்ந்து விழுந்துள்ளன. மேலும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த டிரம்ப் அங்கிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகினார். சில நாட்களிலேயே ரஷ்யா, துருக்கியுடன் இணைந்து சிரியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளானது.
இதேபோல் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோ பைடன் மீது ஊழல் புகார் எழுப்புமாறு உக்ரைன் அரசை வலியுறுத்தியது, அதற்காக பதவி நீக்கத் தீர்மானத்தை சந்தித்தது என பல்வேறு சர்ச்சைகளை சிக்கியதால் டிரம்ப் மீதான ஈர்ப்பு அமெரிக்கர்கள் மத்தியில் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சமீபத்தில் நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் டிரம்பை மற்ற நாடுகளின் அதிபர்கள் கூட்டாக சேர்ந்து கிண்டல் செய்தது போன்ற தொடர்ச்சியாக நிகழ்வுகள் அவருடைய செல்வாக்கை சரித்துள்ளன
இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்காக நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றார், பிரதமர் மோடியுடன் கைகோர்த்தவாறு இருவரும் அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினரிடையே நடந்து சென்றனர். அப்போதே அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பிரதமர் மோடி மீதும் இந்தியா மீதும் அமெரிக்க மக்களுக்கு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சரிந்துள்ள தன்னுடைய செல்வாக்கை மீட்கவும், இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைப் பெறவும், அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் இந்தியப் பயணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த அதிபர் டிரம்ப் முயற்சி செய்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதை உறுதி செய்யும் வகையில் அண்மைக் காலமாக பிரதமர் மோடியை புகழும் டிரம்ப் இந்திய வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தன்னை வரவேற்க 70 லட்சம் மக்கள் வருவார்கள் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அகமதாபாத் நகரின் மொத்த மக்கள் தொகையே 80 லட்சம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் டிரம்பை வரவேற்க பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹவுடி மோடி நிகழ்ச்சியைப் போல நம்ஸ்தே டிரம்ப் என்ற மிகப்பெரிய நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில் இந்தியப் பயணத்தை தன்னுடைய பிரசார களங்களில் பயன்படுத்தி இந்திய வம்சாவளியினர் வாக்குகளையும் அமெரிக்கர்களின் வாக்குகளையும் அள்ள டிரம்ப் முயற்சிக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனினும் இந்திய வருகை டிரம்புக்கு அரசியல் ரீதியாக பலனளித்ததா இல்லையா என்பது வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் அதிபர் தேர்தல் முடிவுக்கு பிறகே தெரிய வரும்
Discussion about this post