உன்னாவ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான உத்தரப்பிரதேசச் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கார் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்தார். இது தொடர்பாக குல்தீப்சிங் செங்காரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கடந்த ஆண்டு ஏப்ரலில் சட்டவிரோத ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி, பாதிக்கப்பட்ட இளம்பெண், சென்றுகொண்டிருந்த கார் மீது லாரி மோதியது. இதில் பெண்ணின் உறவினர் இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக குல்தீப் சிங் செங்கார் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத் தலையீட்டை அடுத்து இது தொடர்பான 5 வழக்குகளும் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி எனக் கடந்த 16ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளி குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனையும், 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 10 லட்சம் ரூபாயைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்ந்து, பாதுகாப்பான இருப்பிடத்தை ஏற்பாடு செய்யுமாறும் சி.பி.ஐ-க்கு தீஸ் ஹசாரி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post