நாட்டின் மொத்தப் பரப்பளவில் 24 விழுக்காடு அளவுக்குக் காடுகள் இருப்பதாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் காடுகளின் நிலப்பரப்பு பற்றிய அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில் நாட்டில் 8 கோடியே 7 லட்சம் ஹெக்டேர் பரப்பில் காடுகள் உள்ளதாகத் தெரிவித்தார். இது நாட்டின் மொத்தப் பரப்பளவில் 24.5 விழுக்காடு ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசின் தொடர் முயற்சியால் முந்தைய ஆண்டைவிட ஐயாயிரத்து 188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குக் காடுகள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கர்நாடகம், ஆந்திரம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அசாம், திரிபுரா ஆகியவற்றைத் தவிர மற்ற வடகிழக்கு மாநிலங்களில் காடுகளின் பரப்பு 765 சதுர கிலோமீட்டர் அளவு குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
கடற்கரையோரம் உள்ள அலையாற்றிக் காடுகளின் பரப்பு 54 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். ஒரு நாட்டில் சூழல் சமநிலையைப் பராமரிக்கக் குறைந்தது மூன்றில் ஒருபங்கு அளவுக்குக் காடுகள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post