ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது மத்திய அரசின் விதிமுறைகளை நீர்த்துப் போக செய்வதாக உள்ளது என, கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஒரு சில துறைகளுக்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா வைரசின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்கள் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறைவான பகுதிகளில் இன்று முதல் ஹோட்டல்கள், சலூன் கடைகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள அரசின் இந்த செயல்பாடு, மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறையை மட்டுமே மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் எனவும், சுயமாக கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அஜய் பல்லா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, கேரளாவில் மத்திய அரசின் விதிமுறையே பின்பற்றப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
Discussion about this post