மீனவர்கள் நலனுக்காகவும், மீன்வளத்துறையை மேம்படுத்தவும் தனித்துறை அமைக்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 2019-20ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் பியூஷ் கோயல், சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு திட்டங்கள் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அவர் அறிவித்தார். மேலும் மீனவர் நலனுக்காகவும், மீன்வளத்துறையை மேம்படுத்தவும் தனி அமைச்சகம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அரியானா மாநிலத்தில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கிஷான் யோஜனா திட்டத்தின்கீழ் சிறிய விவசாயிகளுக்கு உதவ 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 12 கோடி விவசாயிகள் பலன்பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். கால்நடை வளர்ப்பு, மீனவர் நலனுக்கு 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பியூஷ் கோயல், கிராமப்புற சாலைகளை மேம்படுத்த 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பணியாளர்களின் ஈஎஸ்ஐ வரம்பு 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பணிக்கொடை வரம்பு 10 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
Discussion about this post