மீன்வளத்துறையின் கீழ், 27 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மீன்வளத்துறையின்கீழ், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில், சுமார் 27 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்துவைத்தார். இதேபோன்று, மீன்வளத்துறை சார்பில், 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் அடையாளமாக 7 மீனவர்களுக்கு படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டை தொடங்கிவைத்து, அதன் கொடியை, காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கென வடிவமைக்கப்பட்ட பேட்ஜை, காவலர்களுக்கு முதலமைச்சர் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோன்று, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 99 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Discussion about this post