தமிழ்த் திரைப்பாடல் வரலாற்றில் முன்னோடிக் கவிஞராக ஒளிர்ந்த உடுமலை நாராயண கவியின் 112-வது பிறந்தநாள் இன்று. வெற்றிப் பாடல்களைத் தந்த வித்தகரின் வரிகளை நினைத்து நெகிழ்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…
பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் பாடி, மக்கள் மனத்தில் தம்மைப் பதிப்பித்துக்கொண்ட இந்த வரிகளை எழுதியவர் – உடுமலை நாராயணகவி. திருப்பூரில் பிறந்து, தெய்வப் பாடல்களைத் தொடக்கத்தில் எழுதிவந்த இந்தக் கவியுள்ளம், மகாகவி பாரதியாருடன் கொண்ட நட்பால், பின்னாட்களில் புரட்சிக் கருத்துகளைப் புனையத் தொடங்கியது. ((பேரறிஞர் அண்ணாவின் அருந்திரை ஓவியங்களுக்கு, பாடல்களை அள்ளி வார்த்த அட்சய பாத்திரமாக உடுமலை நாராயண கவி ஒளிர்ந்தார்.)) தீப்பெட்டி வியாபாரியாக தமது ஆரம்ப காலத்தைத் தொடங்கிய இவர், பின்னர் திரைப்பெட்டிக்குள் நுழைந்து மக்கள் மனப்பெட்டிக்குள் பாடலாகவே பதிவானார்.
கலைவாணர் என்.எஸ்.கேவுக்குக் குருவாகத் திகழ்ந்த உடுமலை நாராயண கவி, ஏறத்தாழ 10 ஆயிரம் பாடல்களைப் படைத்தளித்தார். இவரது பெரும்பாலான பாடல்களில், பாமரர்களுக்கு எட்டும் வகையில் அந்தக் காலத்துக் கிராமிய ரசனை இழைந்திருக்கும். புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு உள்ளிட்ட கிராமியக் கலைகளில், தம் இளமை முதலே வித்தகம் பெற்றிருந்த உடுமலையார், நகர சினிமாவுக்குள் கிராமியம் பாடிய காட்டுக்குயில் எனலாம்.
தேவதாஸ் என்ற திரைக்காவியத்தின் அமர வரிகளை யாத்துக் கொடுத்த உடுமலையார், மறுபுறம் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் உணர்ச்சிகள் பொதிந்த வரிகளை வார்த்தளித்தார். ‘ஓர் இரவு’, ‘ராஜகுமாரி’, ‘மனோகரா’, ‘நல்லதம்பி’ உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்கள், உடுமலையாரைப் பாடலாசிரியராகக் கொண்டு உதித்தன. இயல்பிலேயே, சந்தக்கட்டுள்ள சொற்களுக்குச் சொந்தக்காரரான இவர், மெட்டு சொன்ன மாத்திரத்தில் சொற்களைக் கொட்டித் தீர்க்க வல்லவராகத் திகழ்ந்தார்.
கலைமாமணியைப் பெற்ற கவிமாமணியான உடுமலை நாராயணகவி, காலமெல்லாம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் பாடல்களில் பவனி வருகிறார். இவருக்கு உடுமலைப்பேட்டையில் மணிமண்டபம் கட்டி உயர்த்தியிருக்கிறது தமிழர் உள்ளம்…
நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி
Discussion about this post