நாகரிகம் தெரியாத உதயநிதி – அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அரசியல் நாகரீகம் தெரியாமல் வார்த்தைகளை விடுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தங்க சாலையில் முன்னாள் மேயர் சிவராஜின் சிலைக்கு, அவரின் 129-வது பிறந்த தினத்தில் தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஆரோக்கியமான விவாதங்களுடன் நேற்று நடைபெற்று முடிந்திருக்கிறது; அ.தி.மு.க. கூட்டத்தில் பூகம்பம் வெடிக்கும், குளறுபடி ஏற்படும், அதில் குளிர் காயலாம் என்று நினைத்த தி.மு.க.-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது; அ.தி.மு.க. செயற்குழுவில் ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமான விவாதங்கள் இருந்தன” என்று கூறினார்.

மேலும், ”செயற்குழுக் கூட்டத்தில் சசிகலா குறித்து விவாதிக்கப்படவில்லை; விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வேளாண் மசோதா குறித்து தி.மு.க. திட்டமிட்ட நாடகத்தை நடத்தி வருவருகிறது. திமுக இந்த விவகாரத்தை வேண்டுமென்றே அரசியலாக்கி வருவகிறது என்றார் அவர்.

“தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அரசியல் நாகரீகம் தெரியாமல் வார்த்தைகளை விடுகிறார். அதிலும் ’தறுதலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்; தறுதலையாக இருப்பவர் தான் பார்ப்பவர்களை எல்லாம் ’தறுதலை’ என்று சொல்வார்கள்” என்றும் அமைச்சர் காட்டமாகக் கூறினார்.

இந்நிகழச்சியில், அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், சரோஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version