திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் 4 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்ததால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து கலைந்து சென்றனர்.
வேடசந்தூரில் திமுக -காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தொண்டர்கள் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
கூட்டம் துவங்கி 4 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக உதயநிதி ஸ்டாலின் வந்ததால், பொதுமக்கள், தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்து திமுகவினர் தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டனர்.
பிரசாரக் கூட்டத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தொண்டர்கள் குடிபோதையில் தனியாக கச்சேரி நடத்தியது, அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க செய்தது.
சென்னை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி பறவை காவடியில் சென்ற நிலையில், திமுகவினரின் பிரசாரக் கூட்டத்தால், அவர்களது ஆன்மீக பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டது.