ஈரோட்டில் சிறுநீரகங்களை விற்க வருவோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் தருவதாக, போலி முகநூல் தகவல் மூலம் ஏமாற்றிய கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபலமான சிறுநீரக மருத்துவமனையின் பெயரில், போலி முகநூல் கணக்கு மூலம் செய்யப்பட்ட விளம்பரத்தில், சிறுநீரகங்களை தானம் செய்பவர்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் தரப்படும் என்றும் அதற்கு முன்பணமாக ஒரு சிறுநீரகத்துக்கு ரூபாய் 7 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கபட்டிருந்தது.
இதை நம்பி 15 ஆயிரம் ரூபாய் செலுத்திருந்த நபர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்து, ஏன் இன்னும் என்னை அழைக்கவில்லை என்று கேட்டுள்ளார். முதலில் ஒன்றும் புரியாத நிலையில், அதன்பின் முழு விவரமும் அறிந்த மருத்துவமனை நிர்வாகம், காவல்துறையில் புகாரளித்தது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், போலி விளம்பரத்தை நம்பி இந்தியா முழுக்க பலரும், கோடிக்கணக்கான ரூபாய் ஏமாந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களது செல்போன் சிக்னல் மற்றும் வங்கி டெபிட் கார்டுகளை ஆராய்ந்து பெங்களூருவில் பதுங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். இதுவரை வந்த அழைப்புகளின்படி, ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
Discussion about this post