ஆசியப் போட்டிகளில் தங்கம் மேல் தங்கம் வெல்லும் இந்தியர்கள்! யார் யார்?

மகுடம் சூடிய தஜிந்தர்:

24- வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஆசிய சாதனையாளரான இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் களமிறங்கினார். அவருக்கான இரண்டாவது முயற்சியில் 20.23 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார். அதன் பிறகு அவரின் இடுப்பின் கீழ் பகுதியில் ஏற்பட்ட  வலியின் காரணமாக அவரால் அடுத்த  சுற்றில் விளையாட முடியாமல் போனது.  இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த படியே அவர் எறிந்த 20.23 மீட்டர் தூரம் குண்டு தங்கப்பதக்கத்தை  தட்டிச்சென்றது.   28 வயதான தஜிந்தர்பால் சிங் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். அதன் பிறகு மூன்றாவது குண்டு எறிதல் வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.அவர் கடந்த 2019-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.

இந்த வகையில் ஏற்கனவே கத்தாரின் பிலால் சாத் முபாரக்  மற்றும், குவைத்தின் முகமது காரிப் அல் ஜிங்வி ஆகியோர் தொடர்ச்சியாக தங்கம் வென்று சாதனை படைத்திருக்கின்றனர். தஜிந்தர்பால் சிங்கின் காயத்தின் காரணமாக அடுத்த மாதம்  ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும்  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்  அவரால் கலந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புவனேஷ்வரில் கடந்த மாதம் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் 21.77 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ஆசிய சாதனை படைத்த தஜிந்தர் பால் சிங் அதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார்.

கலக்கும் பாருல் சவுத்ரி மற்றும் ஷைலி சிங்!

பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேஸ் ஓட்டப்பந்தயம் நடைப்பெற்றது. அதில்  28 வயதான இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி கலந்துக்கொண்டார். அவர்  9 நிமிடம் 38.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்று சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில், சீனாவின் ஷூயாங் சூ  வெள்ளிப்பதக்கத்தையும், ஜப்பானின் யோஷிமுரா ரெய்மி வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.  பெரிய சர்வதேச போட்டியில் பாருல் சவுத்ரி தங்கப்பதக்கத்தை வெல்வது என்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து வெள்ளிப்பதக்கத்தை கைபற்றினார் ஷைலி சிங்.

வெள்ளிப் பதக்கம் வென்ற ஷைலி சிங்!

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம் வீராங்கானை ஆன ஷைலி சிங் 6.54 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். 2021-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி சிங் பெரிய அளவிலான போட்டியில் சீனியர் பிரிவில் கைப்பற்றிய முதல் பதக்கம் இதுவே ஆகும். ஜப்பானின் சுமிரே ஹடா (6.97 மீட்டர்) தங்கப்பதக்கத்தையும், சீனாவின் ஜோங் ஜியாவி (6.46 மீட்டர்) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர். இதுவரை இந்தியா ஐந்து தங்கப்பதக்கமும், மூன்று வெண்கலப்பதக்கமும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்று  பதக்கப்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

 

Exit mobile version